1.01.2012

யார் பொறுப்பு?

"புது வருஷம் பொறந்திருச்சி...இன்னிக்கி போய் டூட்டி போட்டாங்க..." என்று புலம்பியபடியே வந்த டிரைவர் கல்பனாவை ஜெய்லர் அழைத்து வண்டி எடுக்க சொன்னார்.

"எங்க போறோம் மேடம்?"

"சொன்னாத்தான் எடுப்பீங்களோ?"

மறுவார்த்தை பேசாமல் ஜீப்பை எடுத்து வந்து நிறுத்தினர். அதற்குள் கைதி எண் 888 தயாராய் இருந்தார். மூவரும் ஏறிக்கொள்ள ஜீப் புறப்பட்டது.

ஜெய்லர் கல்பனாவிடம், "ஆம்பிளைங்க செக்க்ஷனுக்கு போங்க!" என்றார்.

பதில் ஏதும் பேசாமல் கல்பனா வண்டியை முடுக்கினார். கைதியின் பெயர் ரோஜா. ஒரு வகையில் ஜெய்லருக்கு தூரத்து சொந்தம். ஜீப் சென்ற காட்டு வழியில் எங்கே செல்கிறோம் என்று தெரியாமல் திகைப்போடு ஆனால், மௌனமாக ஜெய்லர் மீதுள்ள நம்பிக்கையில்  மரங்களின் அசைவை ரசித்தபடி  பயணித்தாள்.

"Men's Division boundary" என்று எழுதி மஞ்சள் முக்கோணத்தில் ஆச்சர்யகுறியோடு ஒரு பலகை வரும்போது ஜெய்லர் கையசைக்க ஜீப் நின்றது.

"கல்பனா...ஜீப்ப திருப்பி நிறுத்து!" என்று சொல்லிவிட்டு தன் கால் சட்டையின் பையில் இருந்து ஒரு பொட்டலத்தை எடுத்து ரோஜாவின் கையில் திணித்து தூரத்தில் இருக்கும் மின்கம்பத்தை அடையாளம் காட்டி அங்கே போகச்சொன்னார். திகைப்பில் இருந்து மீளாமல் அதே நம்பிக்கையுடன் மின்கம்பத்தை நோக்கி ரோஜா சென்றுவிட்டாள்.

 பொட்டலத்தை பார்த்த கல்பனாவிற்கு ஏதோ தோன்ற, "மேடம்..." என்று அழைத்தார். கல்பனாவின் கண்களை சற்று உற்று பார்த்துவிட்டு, "சந்தேகம் எல்லாம் படாதே, பொட்டலத்தில் இருந்தது அதுவேதான்!"

கல்பனாவிற்கு ஜெய்லர் மீது இருந்த மரியாதை குறைந்தது. இதுவரையில் தன்னுடைய தாய் ஸ்தானத்தில் வைத்து பார்த்த கல்பனாவிற்கு ஜெய்லரின் இந்த செய்கை அதிர்ச்சியை கொடுத்தது.

ஜெய்லர் தொடர்ந்தார். "இதோ போறாளே ரோஜா, ஒருவகையில எனக்கு தூரத்து சொந்தம். ஒரு கருணைக்கொலை கேசு...போன மாசந்தான் தீர்ப்பு குடுத்தாங்க. ஒரு வருஷம்...கடுங்காவல்...கொழந்தை நெஞ்சு வலியால துடிக்க, டாக்டருகிட்ட கொண்டு போனா, 20 லட்சம் செலவாகுமுன்னு சொல்லிட்டாங்க. வேற வழியில்லாம கொழந்தைய .... ?!?!?!? அவ்வளோ பணம் யாருக்கிட்ட இருக்குது...என்னாலையும் ஒன்னும் செய்ய முடியல!"

இன்னும் தெளியாமல் இருக்கும் கல்பனாவின் முகத்தில் பல கேள்விகள்.

"இப்பக்கூட அந்த கரண்ட்டு கம்பத்தாண்ட அவ புருசன்தான் வெயிட் பண்றான். அவனை பாக்கத்தான் அனுப்பி வெச்சேன். சின்னஞ்சிறுசுங்க! கல்யாணம் ஆகி 2 வருஷம் ஆகுது. அப்பிடி இப்பிடி இருக்கட்டுமே...52 வயசாகுது...எனக்கே மாசத்துக்கு ரெண்டு வாட்டி தேவைப்படுது... அதுங்க இளசுங்க...ஒரு பாவமும் செய்யல...என்னதான் சட்டம் தண்டனை குடுத்தாலும், என்னால அத ஏத்துக்க முடியல...அதே சமயத்துல அவங்கள வெளிய கொண்டு வரவும் முடியாது. அதான் என்னால முடிஞ்சது...?!?!?"

"அப்ப பொட்டலம்?" என்று கல்பனா கேட்க, "உள்ள இருக்கும்போது உண்டாயிட்டா யார் பொறுப்பு? அதான்..சேப்டிக்கு...புரிஞ்சுதா?"

மறுபடியும், கல்பனாவிற்கு ஜெய்லர் தாயாகவே தெரிந்தார்.


புது வருஷத்துல உறவை மேம்படுத்தி கொண்டாடற எல்லாருக்கும் இந்த பதிவு...ஸ்பெஷல் டெடிகேசன்...